♥பிளாஸ்டிக்கை விரட்டிய வாழை இலை!


♥என் தாத்தாவுக்கு, 80 வயதாகிறது. கிராமத்தில் இருந்து, சென்னை வந்த அவர், ஒரு மாதம், எங்களுடன் தங்கினார்.
ஒருநாள் வெளியில் சென்று வந்தவர், பிளாஸ்டிக்கின் உபயோகத்தை அரசு தடை செய்துள்ள போதும், பெருமளவு மாற்றம் இல்லாததை கண்டு மனம் வருந்தினார்.

♥மறுநாள், கோயம்பேடு காய்கறி சந்தைக்கு சென்று, நீளமான வாழை இலைகளை, குறைந்த விலைக்கு பேரம் பேசி வாங்கி வந்தார். அவற்றிலிருந்து, நுனி இலை, ஏடு, டிபன் ஏடு என்று பிரித்தெடுத்தார். டிபன் ஏடை விட, சற்று சிறிதாய் விழுந்த இலைகளையும் தனியாக எடுத்து வைத்துக் கொண்டார்.
வீட்டில் உள்ளவர்களை, டிபன் மற்றும் சாப்பாட்டை வாழை இலையில் சாப்பிட செய்தார்.
'
♥வாழை இலையில் சாப்பிடுவது, உடலுக்கு ஆரோக்கியமானது. சாப்பிட்ட இலையை எறிந்து விடலாம். தட்டுகளாக இருந்தால், அலம்பி சுத்தப்படுத்த வேண்டும். தண்ணீர் தட்டுப்பாடு உள்ள இந்நேரத்தில், இலையில் சாப்பிடுவதால், கணிசமான அளவு நீரை சேமிக்கலாம்...' என்றார்.
எங்கள் குடியிருப்பில் இருப்பவர்களிடம் தன்மையாக பேசி, அவர்களையும், வாழை இலையில் சாப்பிட பழக்கி விட்டார்.

♥கைவசமிருந்த சிறிய ஏடுகளை, அப்பகுதியில் இருந்த, பூ, வெற்றிலை மற்றும் வெண்ணெய் விற்கும் சிறு வியாபாரிகளிடம் கொடுத்தார். பொருட்களை அவற்றில் கட்டி, வாடிக்கையாளர்களுக்கு தரும்படி கேட்டுக் கொண்டார்.

♥சிறிது காலமே எங்கள் வீட்டில் தங்கிய அவர், வாழை இலைகளின் மீது ஈர்ப்பு வரும்படி செய்த அதிசயத்தை கண்டு, அனைவரும் பெருமை கொண்டோம்!
இதுபோல், அவரவர் பகுதியில் செய்ய முயலலாம். மாற்றம் என்பது முடியாதது இல்லை அல்லவா!